2024 ஆம் ஆண்டு கனடா மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும், அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் தெகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ரொய்ட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது
கனடா கடந்த வருடம் அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது, ஒரு தசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அதிகளவானவர்கள் வெளியேற்றப்பட்டமை கடந்த வருடம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வரை கனடா நாடுகடத்தியவர்களின் எண்ணிக்கையை வைத்துபார்க்கும் போது 2015ம் ஆண்டின் பின்னர் கடந்த வருடமே கனடா அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
நாடு கடத்துவதற்காக அதிகளவு நிதியை கனடா அரசாங்கம் கடந்த வருடம் ஒதுக்கியிருந்தது.
புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கனடாவில் வீடுகளிற்கான தட்டுப்பாட்டினை புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரிக்கின்றது என்ற சர்ச்சை போன்றவற்றை எதிர்கொண்டிருந்த ஜஸ்டின் ட்ருடோ அரசாங்கம் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதை தீவிரப்படுத்தியுள்ளது.
அதேவேளை 2020 முதல் புகலிடக்கோரிக்கைகளை பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவே நாடு கடத்தல்களை தீவிரப்படுத்த வேண்டிய நிலையேற்பட்டது என கனடாவின் எல்லை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து தாமாக வெளியேறியவர்கள், இருதரப்பு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் விபரங்களை ரொய்ட்டர்ஸ் கோரியிருந்தது.
இது தொடர்பில் கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு வழங்கியுள்ள புள்ளிவிபரங்கள் மூலம் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதி வரை 7300 பேரை நாடுகடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8வீதம் அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.