நீண்டகாலமாக ஆக்சன் லவால் கட்சியிலிருந்து சோமேடி மாநகர சபை உறுப்பினராக இருந்த அக்லாயா ரெவெலாகிஸ் அந்த கட்சியிலிருந்து வெளியேறியது ஆக்சன் லவால் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கபடுகிறது.
2013 இல் லாவல் நகர சபையில் முன்னாள் மாநகர சபை தலைவர் கில்லஸ் வைலன்கோர்ட்டின் ஏகபோக பிடியில் இருந்த சோமேடி தொகுதியை ஆக்சன் லவால் கட்சி கைப்பற்றி சோமேடி மாநகர சபை உறுப்பினராக அக்லாயா ரெவெலாகிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்போதிருந்து, அவர் மூன்று தேர்தல்களில் பெரும்பான்மையை வென்று , சோமேடி மாநகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குறிப்பாக 2022ம் ஆண்டு கியூபெக் தமிழ் சமூக மையத்துடன் இணைந்து இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என லவால் மாநகர சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று லவால் மாநகர சபை அங்கீகரித்தது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதற்கான பிரேரணையை அக்லாயா ரெவெலாகிஸ் 2022 நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆக்சன் லவால் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து சோமேடி மாநகர சபை உறுப்பினராக அவர்களது அணியில் அமரமாட்டேன்,” என்று ரெவெலாகிஸ் கூறினார், அதே நேரத்தில் கட்சியில் தனது அடிப்படை உறுப்புரிமையை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக எமது ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த அவர் ” கடந்த பதினொரு வருடங்களாக எனக்கு ஆதரவளித்த சோமேடியில் உள்ள எனது குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் சேவை செய்வதற்கும் நான் ஒரு சுயாதீன உறுப்பினராக அமர்ந்திருப்பேன்,” என்று தெரிவித்தார்.