வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ்க்கு சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர் ,
எமது மாவட்டத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் 06 ஆண்டுகள் பணியாற்றியவர் எனவும், நிதி, நிர்வாகம் தொடர்பாக பயிற்சி வகுப்புகள் மற்றும் தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வகுப்புக்களை நடாத்தி பல பேரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி புரிந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 04 தேர்தல்களை நடத்தியுள்ளார். நான் தெரிவத்தாட்சி அலுவலகராக கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் கடமையாற்றிய போது என்னுடன் பக்கபலமாகவிருந்து தேர்தல் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக எனது நன்றிகள்.
தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை மிகவும் நேர்த்தியாக கையாண்டு வந்தவர். இவரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.