தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (23) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு நகரத்தின் பிரதான கடற்கரையில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது.
“சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், கண்ணாடியிலான கழிவுப் பொருட்கள், இலகுவில் அழிந்து போகக்ககூடிய கழிவுப் பொருட்கள் என ஏராளமான கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டுள்ளதோடு தொடர்ந்துவரும் காலங்களிலும் நிலைபேறான தூய்மையாக்கலை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பணியின் ஆரம்ப நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு. திலகநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.குணபாலன், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியினை முன்னெடுத்தனர்.
மேலும் இதனுடன் இணைந்ததாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய 19 இடங்களிலும் சம நேரத்தில் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று காலை செயற்படுத்தப்பட்டது.