மக்களின் மனங்களில் – எண்ணங்களில் – நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் அடிப்படையாகும். அதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தூய்மையான இலங்கை செயற்றிட்டம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. எமது பிரதேசத்தை துப்புரவாக வைத்திருத்தல் என்பது அதன் ஓர் அலகுதான்.
1970ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தூய்மையான மாவட்டமாக யாழ்ப்பாணம் இருந்தது. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. அன்று பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை குறைவாக இருந்தது. ஆனால் இன்று அது பல்கிப்பெருகிவிட்டது.
எமது இடத்தை துப்புரவாக வைத்திருக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டும். எங்களுடைய இடம் நாங்கள்தான் துப்புரவாக வைத்திருக்கவேண்டும். வேறு ஆட்கள் வந்து துப்புரவு செய்து தரமாட்டார்கள். நாங்கள் முன்னர் இந்த இடத்தில்தான் குப்பை போட்டோம். குப்பைகளை எரித்தோம் என்று சொல்லிக்கொண்டிருக்காமல் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மதிலால் வீதியில் குப்பைபோடுவது, வாய்க்கால்களில் குப்பைகளைப்போடுவது என்று முறைதவறிய செயற்பாடுகளில் ஈடுபடாமல் எங்கள் எண்ணங்களில் மாற்றங்களை உருவாக்கவேண்டும். அதுதான் தூய்மையான நகரத்தின் உண்மையான இலக்காக இருக்கும் என ஆளுநர் தெரிவித்தார்.