யாழ்ப்பாணத்தில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த வயோதிப பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவமலர் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்றையதினம் அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்தனர்.
இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இருவரும் வழிபட்டுவிட்டு பாதசாரி கடவையூடாக வீதியை கடந்தனர். இதன்போது நெல்லியடி பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.
அதில் படுகாயமடைந்தவரை உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
