நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நமது உடலில் ஏற்படும் பல வித பிரச்சனைகளுக்கு இந்த உணவுகளின் மூலமே நிவாரணம் கிடைக்கும். அப்படி, பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் உணவுகளில் இஞ்சியும் ஒன்று.
மூட்டுவலி, சளி, இருமல், வயிற்று வலி, மலம் கழிப்பதில் சிரமம், குமட்டல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் நாம் பெரும்பாலும் இஞ்சியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், வலிகளை போக்கவும் இஞ்சியை பயன்படுத்தலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இஞ்சி உலகின் சிறந்த வலி நிவாரணிகளில் ஒன்று. அதில் உள்ள அற்புதமான பைட்டோ கெமிக்கல்கள் தான் இதற்குக் காரணம். ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற இயற்கை இரசாயனங்கள் இஞ்சியில் உள்ளன. இவை இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் பண்புகளுக்கு காரணமாகின்றன.
இஞ்சியால் உடலின் இந்த வலிகளை சரி செய்யலாம்
தலைவலி (Migraine): தலைவலிக்கு இஞ்சி நல்ல நிவாரணமாக அமைகின்றது. 20 கிராம் இஞ்சியை அரைத்து அதன் சாற்றில் அரை கப் குடித்து, அரைத்த இஞ்சியை பேஸ்டாக நெற்றியில் தடவினால், தலைவலி மறைந்துவிடும். ஒற்றைத் தலைவலி, அதாவது மைக்ரேன் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும் மருந்தான டிரிப்டான் மற்றும் இஞ்சி ஆகியவை ஒரே மாதிரியான விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஒரு மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மூட்டுவலி (Joint Pain): மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இஞ்சி பெரிய அளவில் நிவாரணம் அளிக்கின்றது. மூட்டு வலி உள்ளவர்கள் அதை குணப்படுத்த அதிக அளவிலான வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல் இதில் நிவாரணம் பெற, இஞ்சி உதவும். இஞ்சியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், கனமான மருந்துகளால் வயிற்றின் உட்புறப் புறணிக்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதிலும் சரிசெய்வதிலும் வல்லமை கொண்டவை.
மாதவிடாய் பிடிப்புகளுக்கு நன்மை பயக்கும் (Period Cramps): குளிர்காலத்தில் வீக்கம் மற்றும் வலி பிரச்சனை அதிகமாகும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தசை மற்றும் மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான பிடிப்புகளுக்கு நிவாரணம் பெறவும் இஞ்சியை உட்கொள்ளலாம்.
சளி மற்றும் இருமலை சரி செய்ய உதவும் (Cold, Cough): சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி நுரையீரலில் வெப்பத்தை உருவாக்குகிறது. அதன் பிறகு இது நுரையீரலில் படிந்திருக்கும் சளியை உருக்க உதவுகிறது. இந்த வழியில் இது சளி மற்றும் இருமலை சரி செய்ய திறம்பட செயல்படுகிறது.
நீரிழிவு நோயில் நன்மை பயக்கும் (Diabetes): நீரிழிவு நோய் அல்லது இதய நோய் உள்ளவர்களுக்கு இஞ்சி சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இதய நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக நீரிழிவு மற்றும் இதய நோய் கட்டுப்பாட்டிலும் இது உதவுகின்றது.
உடலில் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த இஞ்சி எப்படி உட்கொள்வது?
– தலைவலி இருந்தால், 15-20 கிராம் இஞ்சியை நசுக்கி, அதன் சாற்றைப் பிரித்தெடுத்து குடிக்கவும்.
– மீதமுள்ள பகுதியை வலி உள்ள இடத்தில் தடவினால், அரை மணி நேரத்திற்குள் பலன்கள் தெரியத் தொடங்கும்.
– இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
– இஞ்சியை தேநீர், ரசம், துவையல் மற்றும் பிற உணவுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.