அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மேலும் இரண்டு லிபெரல் அமைச்சர்கள் அறிவித்தனர்.
ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் பதவி வகித்த அமைச்சர்கள் ஆரிப் விரானி, மேரி என்ஜி ஆகியோர் இந்த முடிவை திங்கட்கிழமை (10) அறிவித்தனர்.
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை கடந்த 12 மாதங்களில் அறிவித்த பல உயர்மட்ட லிபெரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் நீதி அமைச்சர் ஆரிப் விரானி , சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி என்ஜி , ஆகியோர் இணைந்துள்ளனர்.
2015 தேர்தலில் புதிய ஜனநாயகட்சி (NDP) கட்சியிடமிருந்து Parkdale-High Park தொகுதியை ஆரிப் விரானி வெற்றி பெற்றார்.
அவர் அமைச்சரவைக்கு 2023 இல் நியமிக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவையில் பணியாற்றிய மேரி என்ஜி, ஏன் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
2017 இடைத் தேர்தலில், தமிழரான ராகவன் பரஞ்சோதியை வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் Liberal அமைச்சர் ஜான் மக்ளும் பிரதிநிதித்துவப்படுத்திய மார்க்கம் -தொர்ன்ஹில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மேரி என்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பழமைவாத கட்சி (Conservative) கட்சி சார்பாக இந்தத் தொகுதியில் தமிழரான லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.