மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (29) காலை 8.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.ஜே.பஸ்மி தலைமையில் குறித்த வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக் கல்வி பணிமனையின் கல்வி நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.சிறிகாந்தன் கலந்து கொண்டார்.
இதன் போது சாதனை மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் இன்னிசை வாத்தியத்துடன் பாடசாலை மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்த 4 மாணவர்கள் விருந்தினர்களினால் விருது மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முகமது தஸ்னீம் ஜைனப் ரிஜா (ZINAB RIJA) 165 புள்ளிகளையும், பாத்திமா மஹ்லா (FATHIMA MAHLA) 154 புள்ளிகளையும்,பாத்திமா சாஜா (FATHIMA SAJA) 141 புள்ளிகளையும், சன்ஹர் சுலைஹா (SANHAR SULAIHA )139 புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்தனர்.
குறித்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி 70 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் குறித்த மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களும் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.