30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதியான எனது அண்ணனை விடுவியுங்கள் என விக்னேஸ்வரநாதன் பார்த்திபனின் சகோதரி வாகினி ஜனாதிபதி அனுரவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய அண்ணாவிற்கு விடுதலை கிடைத்துவிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் பல ஜனாதிபதிகளிடம் முறையிட்டும் எந்த விதமான தீர்வுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஜனாதிபதி அனுர நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார் அவர் வருகை தரும் தினமான 31ஆம் திகதியுடன் எனது அண்ணா கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது.
கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய அண்ணாவுக்கும் மன்னிப்பு கிடைக்கவில்லை. இந்த முறை சுதந்திர தினத்தில் என்றாலும் அவரை விடுதலை செய்து அண்ணாவை எங்களுடன் சுதந்திரமாக வாழவிடுங்கள்.
நாங்கள் எங்களுடைய குடும்பம் சார்பில் உங்களை கும்பிட்டு கேட்கின்றோம். நீங்கள் என்றாலும் என்னுடைய அண்ணாக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுங்கள்.
30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து எங்களுடைய அண்ணாவுக்கு தற்போது 50 வயதாக போகின்றது. இனியும் அவரை சிறையில் வைத்து இருக்காதீர்கள், சிறையில் வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்.
எங்களுடைய அண்ணா விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் எங்களுடைய குடும்பம் காத்திருக்கின்றது.
நான் இறுதியாக ஜனாதிபதி அனுரவின் கூட்டத்தில் கலந்து கொண்டபோதும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதை நம்பியே நாங்களும் இருக்கின்றோம்.
இந்த சுதந்திர தினத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பளித்து எங்களுடைய அண்ணாவிற்கு சுதந்திரத்தினை கொடுங்கள் என்று நாங்கள் மன்றாடிக் கேட்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.