இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய கடற்தொழிலாளர்களில் 11 தொழிலாளர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கேசன்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பினுள் படகொன்றினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்ய படகினுள் ஏறிய கடற்படையினருடன் படகில் தப்பி செல்ல முற்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களின் படகின் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படகில் இருந்த 13 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரில் இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், அவர்கள் இருவரையும் காங்கேசன்துறை பொலிஸார் ஊடாக யாழ் . போதனா வைத்தியசாலையில் கடற்படையினர் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஏனைய 11 கடற்தொழிலாளர்களையும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் 11 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரு கடற்தொழிலாளிகளும் யாழ் . போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் பாலியல் வன்புணர்வு தொடர்பாக 321 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
சிறுவர்கள் தொடர்பாக கடந்தாண்டு ஆரம்பம் முதல் முடிவு வரை பல்வேறு வகையான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்றுள்ளன.
இதன்படி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகளும், சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1950 முறைப்பாடுகளும், வீதிகளில் யாசகம் பெறுவது தொடர்பில் 229 முறைப்பாடுகளும் பாலியல் செயலுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பில் 25 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தை திருமணம் தொடர்பில் 14 முறைப்பாடுகளும், சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியிடுவது தொடர்பான முறைப்பாடுகள் 151 பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பொறுத்தவரை ஏராளமான முறைப்பாடுகள் சிறுவர்களோடு தொடர்புபட்டவையாகவே உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.