கடந்த காலங்களில் வீட்டு திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியல் அமைச்சர்களிடம் இருந்து வரும் ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்ட த்துக்குரிய பயனாளிகள் அரசியல் தலையீடுகள் இன்றி தெரிவு-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்.
நான் மாவட்டச் செயலாளராக பணியாற்றிய காலங்களில் வீட்டுத்திட்டங்களுக்குரிய பயனாளிகள் தெரிவு செய்யும் போது பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன. ஆனால், தற்போது மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி, முற்றுமுழுதாக சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நாம் செயல் பட்டிருக்கின்றோம், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்றது.
இதற்கமைவாக, வடக்கு மாகாணத்திற்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் வீடற்றவர்கள் என்று எவருமே இருக்கக் கூடாது என்பதுதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக உள்ளது. இதனைப் பல்வேறு அமைச்சுக்களும் மாகாண சபைகளும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்த ஆண்டு 31,000 வீடுகள் இவ்வாறு அமைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக நாம் முன்னெடுக்கும் இந்த வீட்டுத்திட்டத்தில், எங்கு தேவைப்பாடுகள் அதிகமாக உள்ளனவோ அங்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
வீட்டுத்திட்டங்கள் கோரி எனக்குக் கிடைக்கப்பெறும் கோரிக்கைகளை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி, அவர்கள் பொருத்தமான பயனாளிகள் தானா? என்பதைக் களப் பயணங்கள் ஊடாக உறுதிப்படுத்திய பின்னர் வீடுகளை வழங்குகின்றோம்.
அத்துடன், பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் அதனை மேலதிகமாக உறுதிப்படுத்துகிறோம். இவ்வாறு மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் வீட்டு திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியல் அமைச்சர்களிடம் இருந்து வரும். ஆனால், எமது இந்த வீட்டுத்திட்ட த்துக்குரிய எந்தவொரு பயனாளியையும் அமைச்சர்களோ அல்லது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ தெரிவு செய்யவில்லை. முற்றுமுழுதாக சுயாதீனமாக எமது அரச அதிகாரிகளாலேயே இத்தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
வீட்டு திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளே, இது உங்களுக்கான வீடு. உங்கள் வளமான வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதை மனதிலிருத்தி, உரிய காலப்பகுதிக்குள் வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் அந்த வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து, சிறப்பாகப் படித்து முன்னேற வேண்டும்.
உங்கள் கிராமத்தின் உண்மையான அபிவிருத்தி என்பது வீதிகளில் அல்ல, அது உங்கள் பிள்ளைகளின் கல்வியில் தான் தங்கியிருக்கின்றது. மேலும், இந்த வீட்டுத்திட்ட த்துக்குரிய மூலப்பொருட்களை நீங்கள் குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் ஊடாக நாம் உரிய நடவடிக்கைகளை எடுப்போம், என உறுதியளித்தார்.
வடக்கு மாகாண நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ம.சர்மிலீ, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன், மாந்தை கிழக்கு பிரதேச சபைச் செயலாளர் திருமதி பா.சிவதர்சினி, பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் வருமான வரிப் பரிசோதகராகப் பணியாற்றி, நேற்றைய தினம் பாம்பு தீண்டி அகால மரணமடைந்த திருநாவுக்கரசு கிருபாகரன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
