ஒட்டுசுட்டான் பகுதியில் ஒருவர் நாயை கொலை செய்த சம்பவம் இப்பொழுது சமூக வலைத்தளகளில் பேசு பொருளாகியுள்ளது.
இது தொடர்பாக எமது ஐ தமிழ் குழு நாயின் உரிமையாளர்களிடமும் நாயை கொலை செய்ததாக கூறப்படும் ஆட்டின் உரிமையாளரிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம்.
இதன்போது ஆட்டின் உரிமையாளர் கூறிய விடயம் : கடந்த 3 வருடத்தில் 11 ஆடுகளை குறித்த நாய் கடித்து கொன்றுள்ளது . நான் நாயின் உரிமையாளரிடம் இது குறித்து தெரிவித்தேன் மீண்டும் மீண்டும் ஆடுகளை நாய் பிடிக்கும்போது எனக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு கேட்டேன். (அவர்கள் தங்களது கஷ்டமான சூழ்நிலையால் அவருக்கு நஷ்ட ஈடு வழங்க வில்லை என நாயின் உரிமையாளர் கூறியிருந்தார்.) அவர்கள் தரவில்லை. அவர்கள் நாய்க்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் இணக்கசபையிடம் இந்த வழக்கு சென்றது.
இதன்போது ஆட்டின் உரிமையாளர் நாயை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார் . அதற்கு நாயின் உரிமையாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இணக்கசபையில் மூவர் அடங்கிய குழு இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக கூறிய பிறகு ஆட்டின் உரிமையாளரிடமிருந்து கடிதம் பெற்றுக்கொண்ட பிறகு நேற்று மாலை 5 மணிக்கு நாய் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பிறகு கட்டி நாய் இறந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட்து. இதிலிருந்து ஆட்டின் உரிமையாளர் நாயை கொன்றது தெரியவந்தது .இது தொடர்பில் சம்மந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது கொலை செய்யவில்லை எனவும் கயிற்றில் கட்டியதையடுத்து கயிறு இறுக்கி இறந்துபோனதாகவும் தெரிவித்தார்.ஆடுகளை வைத்து வருமானத்தை ஈட்டி வந்த குறிப்பிட்ட பெண் ஆட்டினையும் இழந்து நாயை கொலை செய்ததாக பழியும் ஏற்பட்டு விட்டதாக கலங்கினார். இது தொடர்பான ஒரு வீடியோ எங்களது ஐ தமிழ் முகநூல் பக்கத்தில் நீங்கள் சென்று பார்வையிடலாம்.
இணக்கசபை உத்தியோகத்தரிடம் நாம் பேசிய போது இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக ஒப்புதல் அளித்து கடிதம் வழங்கப்பட்ட பிறகு தான் நாய் ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நாங்கள் கொல்வதற்காக நாயை அவரிடம் ஒப்படைக்க சொல்லவில்லை என குறிப்பிட்டனர்
இந்த சம்பவம் தொடர்பான உண்மையான விடயங்களை மாத்திரம் நாங்கள் உங்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளோம். இது தொடர்பான உண்மைக்கு புறம்பான செய்திகளும் பகிரப்படுகின்றது
இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.