மதிய வேளையில் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மணத்தக்காளி வத்தல் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அருமையான சுவையில் குழம்பு செய்யுங்கள்.
இந்த மணத்தக்காளி வத்தக்குழம்பை செய்தால் குண்டா சோறும் நொடியில் காலியாகிவிடும். முக்கியமாக இந்த குழம்பை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அந்த அளவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
உங்களுக்கு மணத்தக்காளி வத்தக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மணத்தக்காளி வத்தக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* மணத்தக்காளி வத்தல் – 100 கிராம்
* சின்ன வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 200 கிராம்
* நல்லெண்ணெய் – 50 மிலி
* கடுகு – 1 டீஸ்பூன்
* வெந்தயம் – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
* உப்பு – சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* வெல்லம் – 1 டீஸ்பூன்
* புளி – 2 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் மணத்தக்காளி வத்தலையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, குறைவான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளி நீரை ஊற்றி, வெல்லத்தை சேர்த்து கிளறி, குழம்பு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து, எண்ணெய் பிரியத் தொடங்கியதும், அடுப்பை அணைத்தால், சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு தயார்.