உங்கள் வீட்டில் உள்ளோருக்கு குலாப் ஜாமூன் என்றால் பிடிக்குமா? அடிக்கடி வந்து குலாப் ஜாமூன் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் 1 கப் ரவை இருக்கா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு ஜாமூன் செய்யுங்கள். இந்த ரவா குலாப் ஜாமூன் வழக்கமான குலாப் ஜாமூனைப் போன்றே நன்கு பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். முக்கியமாக இந்த ஜாமூன் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருக்கும்.
உங்களுக்கு ரவா குலாப் ஜாமூனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா குலாப் ஜாமூன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரை – 2 கப்
* தண்ணீர் – 3 கப்
* ஏலக்காய் பொடி . சிறிது
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
ஜாமூனிற்கு…
* ரவை – 1 கப்
* நெய் – 1 டீஸ்பூன்
* பால் – 3 கப்
* சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: * முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரையை கரைய வைக்க வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து, கம்பி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் ரவையை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கலந்து, 2 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் அரைத்த ரவா பொடியை சேர்த்து, அதில் 3 கப் பாலை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து விட வேண்டும்.
* பின் அதில் சர்க்கரையை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி, மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* மாவானது நன்கு குளிர்ந்ததும், உள்ளங்கையால் நன்கு பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டிய உருண்டைகளை போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து, சூடான சர்க்கரை பாகுவுடன் சேர்க்க வேண்டும். ஒருவேளை சர்க்கரை பாகு ஆறியிருந்தால், சூடேற்றிக் கொண்டு, பின் உருண்டைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் பொரித்து சர்க்கரை பாகுவுடன் சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 மணிநேரம் ஊற வைத்து, பின் பரிமாறினால், மிருதுவான ரவா ஜாமூன் தயார்.