இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காலை வேளை பானமாக உள்ளது. இலவங்கப்பட்டை தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
உலக மக்களை பாடாய் படுத்தும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இது உலக அளவில் பலரை தன் பிடியில் சிக்க வைத்துள்ளது. உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இதனால் உடலில் வேறு பல நோய்களும் ஏற்படத் தொடங்குகின்றன.
ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதன் பிறகு அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மை. எனினும், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மூலமாக நீரிழிவு நோயை எளிதில் கட்டுக்குள் வைக்கலாம்.
சீரான வாழ்க்கைமுறை
நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையை சரியாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், இதில் சிறிதளவு கவனக்குறைவாக இருந்தாலும், அதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஒவ்வொரு வேளையில் உட்கொள்ளப்படும் உணவிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக காலை வேளையில் உண்ணும் உணவு மிக முக்கியமானது. ஆரோக்கியமான வழியில் நாளை தொடங்குவதன் மூலம், நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
பொதுவாக, நாம் அனைவரும் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அல்லது காபி குடிப்பது வழக்கம். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரையுடன் தேநீர் அல்லது காபி குடிப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனினும், நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தேநீர் உள்ளது. சுகர் நோயாளிகள் இதை கவலையின்றி குடிக்கலாம். இந்த தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை தேநீர்
இலவங்கப்பட்டை சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற மசாலாவாக பார்க்கப்படுகின்றது. இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காலை வேளை பானமாக உள்ளது. இலவங்கப்பட்டை தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை தேநீர் உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை தேநீரின் நன்மைகள் என்ன? அதை எப்படி தயார் செய்வது? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை தேநீரின் நன்மைகள்:
– இலவங்கப்பட்டை சமையலறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மசாலாப் பொருளாகும்.
– இது உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்கின்றது. இது தவிர இதில் பல வித மருத்துவ குணங்களும் உள்ளன.
– இதில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள், ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள், பாலிஃபீனாலிக் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் ஆகியவை உள்ளன.
– நீரிழிவு நோயாளிகள் இலவங்கப்பட்டை தேநீர் குடித்தால், இன்சுலின் எதிர்ப்புப் பிரச்சினையை எளிதில் சமாளிக்க முடியும்.
– இது தவிர, இந்த தேநீர் இன்சுலின் சென்சிடிவிடியை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
– இதுமட்டுமல்லாம்மல், இலவங்கப்பட்டை தேநீர் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், உணவில் இருந்து பெறப்பட்ட ஆற்றலைக் கொண்டு, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. இதன் மூலம் அதை உடலுக்கு மீண்டும் ஆற்றலாகப் பயன்படுத்தவும் உதவுகிறது.
– எடை இழப்பிலும் இலவங்கப்பட்டை உதவும்.
– குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு எடை அதிகரிப்பு ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால், இந்த தேநீர் அதைக் குறைப்பதில் மிகவும் நன்மை பயக்கும்.
– இது மட்டுமல்லாமல், இலவங்கப்பட்டை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.
– இது மன அழுத்தத்தை போக்கி, மனதுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது.
இலவங்கப்பட்டை தேநீர் செய்வது எப்படி?
– தேவையான பொருட்கள்: இலவங்கப்பட்டை – 1, எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி, தண்ணீர் – 2 கிளாஸ்
– முதலில், ஒரு பாத்திரத்தில் தாண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அடுப்பை ஆன் செய்யவும்.
– அதன் பிறகு அதில் இலவங்கப்பட்டை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
– தண்ணீரின் அளவு பாதியாக குறைந்த பின்னர், அதை வடிகட்டி, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
– இந்த இலவங்கப்பட்டை தேநீரை தினமும் குடித்து வருவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.