நாம் நமது உணவின் ஒரு பகுதியாக பல வித காய்களை உட்கொள்கிறோம். ஆனால், இவற்றில் சில காய்களை பலருக்கு பிடிக்கும். சில காய்களை பொதுவாக பலருக்கு பிடிப்பதில்லை. சில காய்கள் மீது மக்களுக்கு அதிக சுவாரசியம் இருப்பதில்லை. அப்படி அதிக சுவாரசியம் காட்டப்படாத காய்களில் சுரைக்காயும் ஒன்று. பெரும்பாலான மக்களுக்கு இந்த காய் சாப்பிட பிடிப்பதில்லை என்றாலும், இதில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த காயை கறி, கூட்டு, பச்சடி, சாறு என பல வழிகளில் உட்கொள்ளலாம். சுரைகாய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் அபாரமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது
சுரைக்காயில் விற்றமின் சி மற்றும் பல அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் அதிக அளவில் தியாமின் உள்ளது. இது உடலில் வீக்கத்தைக் குறைக்கிறது. அடிக்கடி ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் நீரிழப்பு காரணமாக உடல் வீக்கத்திற்கு ஆளாகிறது. சுரைக்காய் போன்ற காய்கறிகள் வீக்கம், உப்பசம், வயிற்று அசௌகரியங்கள் ஆகியவற்றை குறைக்க உதவுகின்றன. வயிறு தொடர்பான கோளாறுகளைத் தவிர்க்க இதை ஒரு அற்புதமான இயற்கை உத்தியாக பயன்படுத்தலாம்.
நீரேற்றமாக வைத்திருக்கும்
சுரைக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இது கிட்டத்தட்ட 92% தண்ணீரைக் கொண்டுள்ளது. வெப்பமான காலநிலையில் இதை உட்கொள்வதன் மூலம், உடலின் நீர் சமநிலையை பராமரிக்கலாம், நீரிழப்பைத் தவிர்க்கலாம். வெப்பநிலை அதிகரிக்கும் போது இது உங்கள் உணவுக்கு ஒரு சிறந்த துணையாக அமையும். அதன் குளிர்ச்சியான பண்புகள் உடலை அமைதிப்படுத்துகின்றன. இதனால் வெப்பத்தால் ஏற்படும் அசௌகரியங்கள் குறைகின்றன.
வயிற்றுக்கு சிறந்தது
சுரைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது செரிமானத்திற்கு உதவக்கூடியதாக இருக்கின்றது. காய்களில் அதிக நீர்ச்சத்து இருந்தால், அது நச்சு நீக்கம் மற்றும் வெப்பக் குறைப்பிலும் உதவும். இது உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது. மலம் கழிக்க அவதிப்படுபவர்கள் தினமும் சுரைக்காய் சாறு குடிக்கலாம்.
சரும மற்றும் கூந்தல் பாதுகாப்பு
சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து, பீனாலிக் கலவைகள், விற்றமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை இருப்பதால், இது கூந்தல் மற்றும் சருமத்திற்கு நல்லது. இரத்த சுத்திகரிப்பு மற்றும் உடலில் இருந்து விரும்பத்தகாத துகள்களை அகற்றி, இது உடலில் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகின்றது. இது கூந்தலின் தரத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
எடை இழப்பு
உடல் பருமனால் பதிக்கப்பட்டு எடை இழக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சுரைக்காய் உதவும். அதில் உள்ள உணவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி காரணமாக, இது உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. சுரைக்காயை உங்கள் உணவில் சேர்ப்பது பசியைக் குறைத்து, தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை தடுத்து எடையை குறைக்க உதவுகின்றது.