சாம்பாரையும், நம்மையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சாதமாக இருந்தாலும் சரி, இட்லி, தோசையாக இருந்தாலும் சரி சாம்பார் இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. சாம்பார் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் விருப்பமான உணவாக இருக்கிறது. சாம்பார் பொதுவானதாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலமும் சாம்பார் செய்வதற்கென தனிப்பட்ட வழிமுறையைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே பலவகை சாம்பார் உள்ளது. காரைக்குடி சாம்பார், மெட்ராஸ் சாம்பார், கும்பகோணம் சாம்பார் என பலவகை சாம்பார்கள் உள்ளது. இந்த ஒவ்வொரு சாம்பாரும் ஒரு விதத்தில் தனித்துவமானது. அந்த வகையில் திருநெல்வேலி சாம்பார் தனித்துவமான சுவை கொண்டது. ஒரே மாதிரியாக சாம்பார் வைக்காமல் இதுபோல வித்தியாசமாக சாம்பார் வைப்பது சமைப்பவர்களுக்கும் சரி, சாப்பிடுபவர்களுக்கும் சரி மிகவும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் சாதத்துக்கு வேற லெவலில் இருக்கும் நெல்லை ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
குக்கரில் வேகவைக்க:
– துவரம் பருப்பு – முக்கால் கப்
– மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
– எண்ணெய் – கால் ஸ்பூன்
அரைக்க:
– துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
– சின்ன வெங்காயம் – 5
– சீரகம் – கால் ஸ்பூன்
சாம்பார் வைக்க:
– எண்ணெய் – 1 டீஸ்பூன்
– நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
– கறிவேப்பிலை – சிறிதளவு
– புளிச்சாறு – அரை கப்
– நறுக்கிய முருங்கைக்காய் – 2
– மாங்காய் – அரை
– சாம்பார் தூள் – 1 ஸ்பூன்
– மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
– மல்லித் தூள் – 1 ஸ்பூன்
– வெந்தயம் – கால் ஸ்பூன்
– உப்பு – தேவைக்கேற்ப
– தண்ணீர் – தேவைக்கேற்ப
– பெருங்காயம் – 1 சிட்டிகை
தாளிக்க:
– எண்ணெய் – 1 ஸ்பூன்
– கடுகு – அரை ஸ்பூன்
செய்முறை: – குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் ஒரு கால் ஸ்பூன் எண்ணெய் விட்டு வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
– ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
– ஒரு பாத்திரத்தில் புளி சாறை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிவப்பு மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் முருங்கைக்காய் சேர்க்கவும். இந்த கரைசலை தனியாக வைக்கவும்.
– ஒரு கடாயில், 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். இதனுடன் எடுத்து வைத்திருந்த புளி சாறு கலவையை சேர்க்கவும். முருங்கைக்காய் நன்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.
– முருங்கைக்காய் முக்கால் வாசி வெந்த பிறகு, நறுக்கி வைத்த மாங்காய் துண்டுகளை சேர்க்கவும். மீண்டும் சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும். மாங்காய் விரைவில் வெந்துவிடும். எனவே சாம்பாரில் மாங்காய் கரைந்து போகாமல் பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மாங்காயை இறுதியாக போடவும்.
– காய்கறிகள் வெந்ததும், மசித்த பருப்பைச் சேர்க்கவும். அதை நன்கு கொதிக்க வைக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு நிமிடம் கொதிக்க விடவும். இப்போது சாம்பார் பொடியை ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்.
– வாசனை நன்றாக வரும் வரை கொதிக்க விடவும். இப்போது ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு போட்டு தாளித்து சாம்பார் மீது ஊற்றி கிளறவும்.
– சாம்பாரின் முழுமையான சுவையை அனுபவிக்க 30 நிமிடம் கழித்து சாதத்தில் ஊற்றி சாப்பிடவும்.