உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியர்களா? இதனால் தினமும் ஒரு வேளையாவது உங்கள் வீட்டில் தோசை செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி தோசை செய்து சற்று போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் சத்தான தோசை உங்கள் வீட்டில் உள்ளோரக்கு செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருமுறை புரோட்டீன் தோசை செய்து கொடுங்கள். புரோட்டீன் தோசை என்பது வேறொன்றும் இல்லை பாசிப்பருப்பு தோசை தான். பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து கொடுப்பது நல்லது. இதனால் உடல் வலுபெறும். மேலும் இந்த தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு புரோட்டீன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புரோட்டீன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு – 1 கப்
* கறிவேப்பிலை – 1 கொத்து
* வரமிளகாய் – 1
* இஞ்சி – 1 இன்ச்
* சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 1 கப்
செய்முறை: * முதலில் பாசிப்பருப்பை கழுவி, குறைந்தது ஒரு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, அந்த பாசிப்பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் கறிவேப்பிலை, வரமிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், தோசை மாவு பதத்திற்கு சிறிது நீரை ஊற்றி, அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றினால், சுவையான பாசிப்பருப்பு தோசை தயார். இந்த தோசையை புரோட்டீன் தோசை என்றும் அழைக்கலாம்.