நுவரெலியாவில் மருந்தகம் ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் ஒருவரை குற்றத்தடுப்பு பிரிவினர் திங்கட்கிழமை (06) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரையை 15,000 ரூபாய்க்கு மருந்தக உரிமையாளர் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் குறித்த மருந்தகத்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிசார் முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான கருக்கலைப்பு மாத்திரைகளை கைப்பற்றியதையடுத்து மருந்தகத்தின் உரிமையாளரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.