சண்டே என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது அசைவ உணவுதான், சொல்லப்போனால் பலருக்கு சண்டே வருவதே அசைவ உணவு சாப்பிடத்தான். அசைவ உணவுகளில் பெரும்பாலான நபர்களுக்கு விருப்பமானது சிக்கன்தான். அதற்கு முதல் காரணம் மட்டனோடு ஒப்பிடும்போது சிக்கனின் விலை மற்றும் சிக்கனின் அருமையான சுவை.
அது மட்டுமின்றி மட்டனை விட சிக்கனை பல வழிகளில் சமைக்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய சிக்கன் ரெசிபி முயற்சிப்பது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் உங்கள் வீட்டில் நீங்கள் ட்ரை பண்ண சூப்பரான ஒரு சிக்கன் ரெசிபிதான் லெமன் சிக்கன். இந்த சிக்கன் செய்வதற்கு எளிதானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த பதிவில் இந்த சூப்பரான சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
அரைக்க:
– நறுக்கிய வெங்காயம் – 1
– பூண்டு – 5 பல்
– நறுக்கிய இஞ்சி – 1 துண்டு
– தண்ணீர் – கால் கப்
மேரினேட் செய்ய:
– சிக்கன் – அரை கிலோ(தொடைப்பகுதி சிறந்தது)
– தயிர் – 3 ஸ்பூன்
– மஞ்சள் – அரை ஸ்பூன்
– உப்பு – தேவையான அளவு
– நறுக்கிய பச்சை மிளகாய் – 3
– எலுமிச்சைச்சாறு – 2 ஸ்பூன்
பிற பொருட்கள்:
– கடலை எண்ணெய் – 2 ஸ்பூன்
– கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
– நறுக்கிய குடைமிளகாய் – 1
– பட்டர் – 2 ஸ்பூன்
– எலுமிச்சைச்சாறு – 1 ஸ்பூன்
செய்முறை: – வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை கால் கப் தண்ணீரில் மென்மையான பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஓரமாக வைக்கவும்.
– சிக்கனை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் அரைத்து வைத்த விழுது மற்றும் மேரினேட் செய்த பொருட்களை சேர்த்து கலந்து நன்கு கிளறவும். இதை நன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
– ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெயை ஊற்றி, அதில் மேரினேட் செய்யப்பட்ட சிக்கனைச் சேர்க்கவும். இதை மூடிவைத்தி 10 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மூடி இல்லாமல் மற்றொரு 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
– சிக்கன் பாதி வெந்தவுடன் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறவும்.
– சிக்கன் முக்கால்வாசி வெந்ததும் அதில் குடை மிளகாய் மற்றும் வெண்ணெயை சேர்க்கவும். வெண்ணெயை சிக்கன் முழுவதும் நன்கு படும்படி கிளறவும்.
– சிக்கனை இறக்குவதற்கு முன்னர் அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து நன்கு கிளறவும்.
– இப்போது அடுப்பை அணைத்து சிக்கனை இறக்கவும். சூடான லெமன் சிக்கன் ரெடி!