அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 63 பொருட்களுக்கான இறக்குமதி வரியை எந்த திருத்தமும் இல்லாமல் பராமரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் 2024 டிசம்பர் 31 அன்று ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, பருப்பு, வெள்ளை சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், தேங்காய் எண்ணெய், தாவர எண்ணெய், ரின் மீன் மற்றும் காய்ந்த மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 63 பொருட்களுக்கு (210 சுங்க குறியீடுகள்) விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை மாற்றமில்லாமல் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானமானது அப்பொருட்களின் விலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட் டியுள்ளது.
மேலும், அரிசி, திணை, பயறு, சோளம், மஞ்சள், பழ வகைகள், மீன் மற்றும் கருவாடு போன்ற உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதே வரி வீதங்களை அவ்வாறே பேணுவதற்கும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.