நீங்கள் முட்டை பிரியரா? அடிக்கடி முட்டைகளை வீட்டில் செய்து சாப்பிடுவீர்களா?அதுவும் ஒரே மாதிரி தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை வித்தியாசமான சுவையில் செய்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடுமாறு, முட்டையைக் கொண்டு வெள்ளை சால்னா செய்யுங்கள். இது நிச்சயம் இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும். இந்த சால்னாவை செய்வது மிகவும் சுலபம்.
உங்களுக்கு முட்டை வெள்ளை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை வெள்ளை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* முட்டை – 6
அரைப்பதற்கு…
* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மிளகு – 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2
* முந்திரி – சிறிது
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 2 துண்டு
* கிராம்பு – 4
* கல்பாசி – சிறிது
* பிரியாணி இலை – 1
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை: * முதலில் முட்டைகளை நீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், வெங்காயம், சோம்பு, பொட்டுக்கடலை, சீரகம், மிளகு, பச்சை மிளகாய் மற்றும் முந்திரி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து வேக வைத்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, இரண்டாக வெட்டி, கொதித்துக் கொண்டிருக்கும் சால்னாவில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை வெள்ளை சால்னா தயார்.