அண்மைகாலமாக,இந்தியாவிலிருந்து புறப்படும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஒக்டோபர் 14-ஆம் திகதி முதல் இன்றுவரை 50 விமானங்களுக்கும், கடந்த 24 மணி நேரத்தில் 11 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், டெல்லியில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற விஸ்டாரா விமானம், ஜெய்ப்பூர்-துபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இதுதவிர 5 ஆகாசா ஏர் மற்றும் 5 இண்டிகோ விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலைச் சந்தித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஆகாசா ஏர் நிறுவனம் கருத்து தெரிவிக்கும் போது , “இன்று, எங்கள் நிறுவன விமானங்களுக்கு எச்சரிக்கை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பாதுகாப்பு நடைமுறைகளின்படி, உள்ளூர் அதிகாரிகள் தேவையான நடைமுறைகளைப் பின்பற்றியதால், அனைத்து பயணிகளையும் இறக்க வேண்டியிருந்தது. சிரமத்தை குறைக்க எங்கள் குழுவினர் உரிய ஆய்வுகளை மேற்கொண்டனர்” எனத் தெரிவித்தனர்.
கடந்த அக்டோபர் 14-ஆம் திகதி முதல், குறைந்தது 50 விமானங்களுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், அதுதொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.