மியன்மாரின் மோ பய் (Moe Bye) பகுதியில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில், திருமண நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலிருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகச் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷான் (Shan) மற்றும் கரென்னி (Karenni) மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில், இடம்பெயர்ந்த இருவரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளையில், இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விமானம் பறக்கும் சத்தத்தைக் கேட்ட சிறிது நேரத்தில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றபோது 17 சடலங்களையும் பல காயமடைந்தவர்களையும் கண்டதாகவும் சாட்சியமளித்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மீட்பு அமைப்பு ஒன்றின் தலைவர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 சிறுவர்கள் உட்பட 21 ஆக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகளவில் உள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உள்நாட்டு மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக மியன்மார் இராணுவத்திடமிருந்து உத்தியோகபூர்வ கருத்து எதுவும் உடனடியாகப் பெறப்படவில்லை.
