கனடாவின் கியூபெக் மாகாணம், ஹட்சன் (Hudson) பகுதியில் அமைந்துள்ள 184 ஆண்டுகள் பழமையான புனித ஜேம்ஸ் தேவாலயத்தை (St-James Church) மீளமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் பெருமளவில் சேதமடைந்திருந்தது.
தேவாலயத்துடன் இணைக்கப்பட்டிருந்த அருகிலுள்ள கட்டடத்தில் முதலில் தீ பரவியதுடன், அங்கிருந்து கூரைப் பகுதிக்குத் தீ பரவி பிரதான தேவாலயத்தையும் பாதித்துள்ளது.
பல மணி நேரமாகத் தீயணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தேவாலயத்தின் முழுமையான கூரை தீயில் அழிந்ததுடன், தீ ஆரம்பித்த அருகிலுள்ள கட்டடமும் முற்றாகச் சேதமடைந்தது.
தேவாலயத்தின் வெளிப்புறச் சுவர்கள் நிலைத்திருந்த போதிலும், தீயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட அதிகளவிலான நீர்ச் சேதம் காரணமாக, தேவாலயத்தின் உள்ளேயிருந்த தளபாடங்களும் தரையின் அடிப்பகுதியும் பாதிக்கப்பட்டன.
இதனால், தரையின் அடிப்பகுதியையும் முழுமையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் மீளமைப்புப் பணிகளில், தேவாலயத்தின் வரலாற்று மற்றும் கட்டடக்கலை அடையாளங்களைப் பாதுகாப்பதுடன், அதன் சில உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பணிகள் மிகவும் பிரம்மாண்டமான திட்டமாக அமைந்துள்ளதாக, மீளமைப்புத் திட்டத்தின் தன்னார்வத் திட்ட முகாமையாளர் மார்கஸ் ஓவன் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், இந்த வரலாற்றுச் சின்னத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
