மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (19.11.2026) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள 45 கிராமங்களிலிருந்து 225-க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கலந்துகொண்டிருந்தனர்.
நானாட்டான் பாடசாலை சந்தியில் இருந்து பொதுப்படம் தாங்கிய நடைபவனியாக இந்நிகழ்வு ஆரம்பமானது.
இதில் கத்தோலிக்க மதகுருக்கள், முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் நடைபவனி நானாட்டான் பிரதேச சபை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதல் நிகழ்வாகப் பொதுச்சுடரினை மாவீரர் கலைமதியின் தாயார் திருமதி செ. ராணி ஏற்றி வைத்தார். பொதுப்படத்திற்கான மலர் மாலையை மாவீரர் சர்மிலனின் தாயார் திருமதி இ. செபஸ்ரியம்மா அணிவித்தார்.
நினைவுச் சுடரினை மாவீரர் புலிக்குட்டி அவர்களின் தாயார் திருமதி ப. ருக்குமனி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கத்தை மாவீரர் இமானின் துணைவியார் ஆரம்பித்து வைத்தார்.
இதனையடுத்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்பு உரைகள் இடம்பெற்றுப் பெற்றோர்களுக்கு நினைவுப் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டன.
