நடிகர் ஆதி நடிப்பில் உருவான ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் பேண்டஸி மற்றும் நகைச்சுவைக் கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சத்யராஜ், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், தானியல் ஆனி போப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, பி.வி. சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
