மொன்றியல் நகரில் வீடற்ற நபர் மீது காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக, இரண்டு காவல் துறை அதிகாரிகள் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மொன்றியல் மாநகரக் காவல்துறையின் (SPVM) 21ஆவது நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து உள்விசாரணை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சக காவல் துறை அதிகாரிகளே இந்த முறையேட்டைத் தங்களது மேலதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“தங்களது உறுப்பினர்கள் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் மொன்றியல் மாநகரக் காவல்துறை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது” எனவும், “உள்விசாரணையின் தன்மை எதுவாக இருந்தாலும், உண்மை நிலையை வெளிக்கொணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தாம் உறுதியுடன் இருப்பதாகவும்” காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கியூபெக் மாகாணச் சட்டங்களின் தனியுரிமை விதிகளின்படி இது குறித்த மேலதிக விவரங்களை வெளியிட அவர்கள் மறுத்துவிட்டனர்.
இச்சம்பவம் மனிதத் தன்மையைக் கேலிக்குள்ளாக்கும் ஒரு கொடூரமான செயல் என சமூக ஆர்வலர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். மொன்றியலில் வீடற்றவர்களுக்கான உதவி அமைப்பான ‘ராப்சிம்’ (RAPSIM) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அன்னி சாவேஜ் இது குறித்துக் கூறுகையில், “இதனை விட மிகவும் தரக்குறைவான அல்லது வன்முறையான ஒரு செயலை கற்பனை செய்து பார்ப்பது கடினம்” எனத் தெரிவித்தார். மேலும், வீடற்ற மக்களுக்கும் மொன்றியல் காவல்துறைக்கும் இடையிலான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், இதனை ஒரு தனிப்பட்ட சம்பவமாக மட்டும் கருதக் கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.
மொன்றியல் மேயர் சொராயா மார்டினேஸ் ஃபெரடா இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்றும், ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கண்ணியத்தை இவை குலைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிலைமையை மேலதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்த பிற காவல்துறையினரைப் பாராட்டிய மொன்றியல் மேயர், முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வர உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
மொன்றியல் காவல்துறையின் தொழிற்சங்கமும் மனித மாண்புக்கு எதிரான அல்லது தொழில்முறை நெறிமுறைகளை மீறும் எந்தவொரு செயலையும் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மொன்றியல் காவல்துறையினர் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விசாரணைகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
