உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு (ஐப்பசி 05), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “சொந்தமாக இருக்க இடம் – அழகான ஒரு வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 170 வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 17 வீடுகளில் அரியாலை தென்கிழக்கு (உதயபுரம்) மற்றும் அரியாலை கிழக்கு ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.
அது தவிர யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேச செயலகங்களான சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 22 வீடுகளும், கோப்பாயில் 18 வீடுகளும், கரவெட்டி மற்றும் பருத்தித்துறையில் தலா 14 வீடுகளும், உடுவில் மற்றும் தெல்லிப்பழையில் தலா 12 வீடுகளும், சண்டிலிப்பாயில் 11 வீடுகளும் யாழ்ப்பாணம், சங்கானை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 10 வீடுகளும், வேலணையில் 9 வீடுகளும், ஊர்காவற்றுறையில் 8 வீடுகளும், காரைநகரில் 2 வீடுகளும், நெடுந்தீவில் ஒரு வீடும் என மொத்தம் 170 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

