இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 46 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை, உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தியமை, நாடாளுமன்ற வளங்களைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற மரபுகளை மீறியதாகவும் சபாநாயகர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திகதி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு தீர்மானிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இதன்படி , சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி முடிவு நாடாளுமன்ற நடவடிக்கைகளின் பின்னரே தெரியவரும்.

