ஐரோப்பிய ஒன்றியம் பெலாரஸ் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு எவ்விதக் காரணமும் இல்லை என லிதுவேனியாவின் வெளியுறவு அமைச்சர் கெஸ்டுடிஸ் புட்ரிஸ் (Kęstutis Budrys) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் அரசாங்கம், தனது எதிர்ப்பாளர்களை அடக்குவதையும், மனித உரிமைகளை மீறுவதையும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறது.
பெலாரஸ் தனது போக்கில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாததால், அந்நாடு மீதான எமது நிலைப்பாட்டைத் தளர்த்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், இன்னமும் சுமார் 1,000 பேர் கைதிகளாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பெலாரஸ் மற்றும் ரஷ்ய அரசாங்கங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும், தடைகள் பிரயோகிப்பது பலன் அளித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், லிதுவேனியா, போலந்து மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளை இலக்கு வைத்து சட்டவிரோத குடியேற்றவாதிகளைப் பயன்படுத்துவது, கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் பலூன் ஊடுருவல்கள் போன்ற பலவிதமான அச்சுறுத்தல்களை பெலாரஸ் மேற்கொண்டு வருவதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்கு பெலாரஸ் தொடர்ந்து சவாலாக விளங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் பெலாரஸ் மீது விதிக்கப்பட்டுள்ள தற்போதைய பொருளாதாரத் தடைகள் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


