மொண்ட்ரியல் நகரில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ள போதிலும், தப்பியோடும் சந்தேகநபர்களைப் பிடிப்பதற்காகப் பொலிஸார் மேற்கொண்ட வாகனத் துரத்தல் (Police pursuits) நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) புதிய ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொண்ட்ரியால் பொலிஸ் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட தனது 2025-ஆம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ அறிக்கையில், நகரின் ஒட்டுமொத்த குற்றங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையின் தரவுகளின்படி, மொண்ட்ரியலில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 24.3 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன.
பொலிஸாரின் தீவிர கண்காணிப்பு, எல்லையோர ரோந்துப் பணிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த முன்னேற்றம் சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியலில் வாகனத் திருட்டுகள் குறைந்தபோதிலும், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதற்காகப் பொலிஸார் மேற்கொண்ட ஆபத்தான வாகனத் துரத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி அதிவேகமாகத் தப்பிச்செல்ல முயலும் ஓட்டுநர்களால் வீதிப் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

