தற்போதைய சிறுபோகத்தில் விவசாயிகளின் நெல் அறுவடைகளை எந்தவித தடையுமின்றி நியாயமான விலையில் கொள்முதல் செய்யும் திட்டத்திற்கு அமைவாக, வவுனியா மாவட்டத்தின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்வு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் அறுவடைக்கு அரசாங்கத்தின் நிலையான விலையை உறுதிசெய்வதையும், சிறு அரிசி ஆலை உரிமையாளர்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வட்டி இல்லாத கடன் வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இக்கடன் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்காக 109 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாய் நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வவுனியா மாவட்டத்தின் ஆறு சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இதுவரை இந்த நிவாரணக் கடன் வசதிக்கு விண்ணப்பித்துள்ளதுடன், அவர்களுக்கு நெல் கொள்முதல் செய்வதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, ஒரு அரிசி ஆலை உரிமையாளருக்கு 20.5 மில்லியன் ரூபாய் வரை நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தின் மூலம் இம்முறை சிறுபோகத்தில் 830 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
நாடு மற்றும் சிவப்பு நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவிற்கும், சம்பா நெல் கிலோவொன்று 130 ரூபாவிற்கும் என்ற அரசாங்கத்தின் நிலையான விலைகளின் கீழ் கொள்முதல் செய்யுமாறு அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சிறுபோகத்திலும் அரசாங்கத்தினால் 1,800 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்திலிருந்து மட்டும் மொத்தமாக 2,500 மெட்ரிக் தொன் நெல்லைக் கொள்முதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிவாரணக் கடன் திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகள் தமது நெல் அறுவடைக்குரிய சரியான விலையைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், அரிசி மாஃபியாக்களின்றி நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விநியோகிக்கவும் வழிவகை செய்யும்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


