மொன்றியலைச் சேர்ந்த சிறுமியான மகளைக் கொலை செய்த தந்தையின் தொலைபேசி இருப்பிடத் தரவுகளே, சிறுமியின் சடலத்தைக் கண்டுபிடிக்க பொலிஸாருக்குத் துணை செய்துள்ளதாக, நியூயோர்க் – எலிசபெத்தவுன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரைச் சேர்ந்த லூசியானோ பிராட்டோலின் என்பவர் மீது, அவரது மகள் மெலினா பிராட்டோலினைக் கொலை செய்தமை மற்றும் சடலத்தை மறைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் கீழ், நியூயோர்க் மாநிலத்தின் எலிசபெத்தவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இவர் மீதான வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்களின் ஆரம்பகட்ட வாதங்கள் ஆரம்பித்துள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி இரவு 10 மணியளவில் பிராட்டோலின், அவசர உதவி எண்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி, வெள்ளை நிற வேனில் வந்த சிலர் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் நியூயோர்க் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
எனினும், பிராட்டோலினின் சம்மதத்துடன் அவரது தொலைபேசியைப் பரிசோதித்த பொலிஸார், அவர் கூறிய தகவல்களுக்கும் தொலைபேசியின் ஜி.பி.எஸ் (GPS) இருப்பிடத் தரவுகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் இருப்பதை அவதானித்தனர்.
நெடுஞ்சாலையில் பயணம் செய்ததாகக் கூறியவர், அதற்கு முந்தைய நாள் டைக்காண்டரோகா (Ticonderoga) என்ற கிராமப்புறப் பகுதியில் நீண்ட நேரம் தங்கியிருந்ததை தொலைபேசித் தரவுகள் காட்டின.
தொலைபேசியின் இருப்பிடத் தரவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தேடுதலில், ஜூலை 20 ஆம் திகதி டைக்காண்டரோகா காட்டுப்பகுதியில் உள்ள ஒரு சிறிய குளத்தின் சேற்று நிலப்பகுதியில் இருந்து சிறுமி மெலினாவின் சடலம் மீட்கப்பட்டது.
அத்துடன், பிராட்டோலின் அன்றைய தினம் மாற்றிய ஆடைகள் மற்றும் காலணிகள் அடங்கிய பையும் சடலத்திற்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுகளை பிராட்டோலின் நிராகரித்துள்ளதுடன், தாம் குற்றமற்றவர் எனவும் தெரிவித்துள்ளார்.
12 பேர்களைக் கொண்ட ஜூரி சபை முன்னிலையில் நடைபெறும் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், சிறுமியின் தாயாரும் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
