அமெரிக்காவில் உள்ள தனது பிரதான தூதரகங்களின் உயர் அதிகாரிகள் (Consul General) குழுவை பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு வர்த்தக உடன்படிக்கையை (CUSMA) நீடிப்பதற்கு அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், லொஸ் ஏஞ்சலஸ், சிகாகோ மற்றும் டெட்ராய்ட் ஆகியவற்றுக்குப் புதிய தூதரக உயர் அதிகாரிகளை கனேடிய மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய நியமனங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னணி எரிசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
ஜூலை மாத ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையின் முதற்கட்டக் காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவின் மிக முக்கிய தூதரகப் பொறுப்பான நியூயார்க் நகரின் புதிய தூதரக உயர் அதிகாரியாக, பிரபல எரிசக்திப் பெருநிறுவனமான ‘ஷெல் கனடா’ (Shell Canada) அமைப்பின் முன்னாள் தலைவரான சுசானா பியர்ஸ் (Susannah Pierce) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் அந்தப் பதவியை வகித்துவந்த முன்னாள் ஊடகவியலாளர் டோம் கிளார்க் (Tom Clark) என்பவரின் இடத்தையே, சுசானா பியர்ஸ் (Susannah Pierce) பொறுப்பேற்கவுள்ளார்.
அதேவேளை, லொஸ் ஏஞ்சலஸ் நகருக்கான கனேடிய தூதரக உயர் அதிகாரியாக முன்னாள் மத்திய சுகாதார அமைச்சரும், லிபரல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் கேரா (Kamal Khera) நியமிக்கப்பட்டுள்ளார்.
‘பேங்க் ஆஃப் கனடா’ (Bank of Canada) அமைப்பின் முன்னாள் பணிப்பாளர் குழுத் தலைவரான கிளெயார் கென்னடி (Claire Kennedy) சிகாகோ நகருக்கான கனேடிய தூதரக உயர் அதிகாரியாகவும், மூத்த தொழில்முறைத் தூதரக அதிகாரியான ஆண்ட்ரியா கிளெமெண்ட்ஸ் (Andrea Clements) டெட்ராய்ட் நகருக்கான கனேனியத் தூதரக உயர் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
