ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு திரும்பினார்.
கடந்த மே 15 முதல் 20 வரை, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த ஐந்து நாட்கள் பயணத்தில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கனிமங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அவர் ஐந்து நாடுகளுக்கான முக்கியத் தலைவர்களையும் சந்தித்து உரையாடினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், பெட்ரோலிய இருப்புக்கள், நீண்டகால எல்பிஜி விநியோகம், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்ச்சியான முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது. மேலும், இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதாக அபுதாபி உறுதியளித்துள்ளது.
நெதர்லாந்து பயணத்தின்போது, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் பிற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 17 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.
சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டத்தில், இந்தியாவும் ஸ்வீடனும் தங்களது நல்உறவை மேம்படுத்த வழிவகை செய்தன.
நோர்வே நாட்டுக்குச் சென்றபோது, தூய்மையான ஆற்றல், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், நீலப் பொருளாதாரம், பசுமைக் கப்பல் போக்குவரத்து, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் ஆர்க்டிக் ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன.
தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமான இத்தாலியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன.
