அரசியல் ஆதாயத்திற்காக அரசு நிதியையும் அலுவலகத்தையும் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சோனா லக்கோயன் ஆலிவர் (Sona Lakhoyan Olivier), கியூபெக் சட்டமன்றத்தில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் நெறிமுறை ஆணையர் (Ethics Commissioner) அரியான் மிக்னோலெட் அண்மையில் வெளியிட்ட விசாரணை அறிக்கையில், சோனா லக்கோயன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
2025-ஆம் ஆண்டு லிபரல் கட்சித் தலைமைப் போட்டியின் போது, அரசு ஊதியம் பெறும் தனது ஊழியர்களைக் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கு, அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் தனது தொகுதிக்கான அலுவலகத்தை, சோனா லக்கோயன் ஆலிவர் தனது கட்சிப் பிரச்சார மையமாக மாற்றியமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தவறுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு 8,000 டொலர் அபராதம் விதிப்பதற்கு கியூபெக் மாகாணத்தின் நெறிமுறை ஆணையர் பரிந்துரைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்துக்கான லிபரல் கட்சித் தலைவர் சார்லஸ் மில்லியார்ட், தங்கள் தரப்பு சட்டமன்ற உறுப்பினராக உள்ள சோனா லக்கோயன் ஆலிவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே, சட்டமன்ற உறுப்பினர் சோனா லக்கோயன் ஆலிவர் (Sona Lakhoyan Olivier), கியூபெக் சட்டமன்றத்தில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கியூபெக் சட்டமன்றத்தில் சோனா லக்கோயன் ஆலிவர் அழுதபடி மன்னிப்பு கேட்டபோதும், கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு, மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
