தமிழினப் படுகொலையின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெறுகின்ற அதே வேளையில் முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் மிகவும் பிரமாண்டமான அளவிலே இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகிறது
அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியிலே தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டதன் 17 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இம்முறையும் மிகவும் சிறப்பாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளின் ஆரம்ப கட்ட பணியாக தமிழினப் படுகொலை வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12) மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலே சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலே மக்கள் அனைவரையும் கலந்துக் கொண்டு வழமை போன்று நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்
அத்தோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறுகின்றவர்கள் கஞ்சியை சுவையாக வழங்க வேண்டும் என்பதற்காக கஞ்சியில் பல பொருட்களை சேர்க்கிறார்கள் ஆகவே இவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி எதற்காக நாங்கள் வழங்குகின்றோம் என்பதை உணர்ந்து முள்ளிவாய்க்காலில் எவ்வாறு அரிசி உப்பு தண்ணீர் ஆகியவற்றை மட்டும் கொண்டு கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டதோ அவ்வாறே முள்ளிவாய்க்கால் கஞ்சியை சரியான முறையில் பரிமாறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வியாபார நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை எதிர்வரும் 18 ம் திகதி வழமைபோன்று இடம்பெறும் நிகழ்வில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
