நாட்டின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான புதிய நிதி அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கையை (Spring Fiscal Update) எதிர்வரும் 28-ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பேன் அறிவித்துள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசு, தற்போது சுமார் 78 பில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்களுக்கு எவ்விதமான நிவாரணங்களை வழங்கப்போகிறது என்பதே இந்த அறிக்கையின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அண்மையில் ஈரான் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனை ஈடுகட்டும்வகையில், பெற்றோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை (Excise Tax) தற்காலிகமாக நீக்குவதாக பிரதமர் கார்னி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் ஏனைய நிவாரணத் திட்டங்கள் இந்த நிதி அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
