மொன்றியல் நகரில் அமுலில் உள்ள குறுகிய கால வீட்டு வாடகை (Short -term rentals) மீதான பகுதித் தடையைத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என மொன்றியல் நகர சபையின் எதிர்க்கட்சியான என்செம்பிள் மொன்றியல் (Ensemble Montréal) வலியுறுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்காக வீடுகளை வாடகைக்கு விடுவதை அனுமதித்தால், அது சாதாரண மக்களின் வீட்டு வசதி உரிமையைப் பாதிக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2025-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, மொன்றியல்வாசிகள் தங்களது முதன்மை இல்லங்களை (Primary Residences) ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மட்டுமே ஏர்பின்பி (Airbnb) போன்ற தளங்களில் வாடகைக்கு விட முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.
இந்த மூன்று மாத கால எல்லையை நீட்டித்தால், வணிக ரீதியான நிறுவனங்கள் மீண்டும் சந்தையை ஆக்கிரமித்து, சாதாரண மக்களுக்கான வாடகை வீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும் என எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜூலியன் ஹேனால்ட்-ரெட்டெல் தெரிவித்துள்ளார்.
மொன்றியல் நகரில் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதியை விட, மொன்றியல் குடியிருப்பாளர்களின் வீட்டு உரிமையே முதன்மையானது என எதிர்க்கட்சியினர் வாதிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
