நாட்டில் Single-event sports betting என்று அழைக்கப்படும் ஒற்றை விளையாட்டுப் போட்டிகள் மீதான சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரையன் மாஸ் (Brian Masse), தற்போது அதன் நடைமுறைப்படுத்தல் குறித்துக் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சில மாகாணங்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள விதம் “வருத்தமளிப்பதாகவும்” மற்றும் “மோசமானதாகவும்” இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
நேற்று ஊடகமொன்றின் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில், பிரையன் மாஸ் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்தச் சட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுமக்களின் நலனுக்காக (கல்வி மற்றும் சுகாதாரம்) பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது நோக்கமாக இருந்ததாகவும் ஆனால், தற்போது தனியார் நிறுவனங்கள் இலாபமடையும் வகையில் இந்தத் துறை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டுப் போட்டிகளின் போது ஒளிபரப்பப்படும் மிதமிஞ்சிய சூதாட்ட விளம்பரங்கள் சமூகத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக பிரையன் மாஸ் சுட்டிக்காட்டினார்.
சூதாட்டத்தினால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளைத் தவிர்க்க அரசு இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், விளம்பரத் தடைச் சட்டங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் எனவும் பிரையன் மாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

