மொன்றியல் நகரம் தற்போது வசந்த காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் நிலவும் ஒரு விசித்திரமான வானிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது.
இன்று காணப்பட்ட இதமான 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சடுதியாக வீழ்ச்சியடைந்து மீண்டும் குளிர்காலத்தை நினைவுபடுத்தும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை 14 டிகிரி செல்சியஸாக இருந்த அதிகூடிய வெப்பநிலை, இன்று இரவு 0 டிகிரியாகக் குறையும் எனவும் நாளை செவ்வாய்க்கிழமை அதிகூடிய வெப்பநிலையே வெறும் 4 டிகிரியாக மட்டுமே இருக்கும் என கனேடிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை சுமார் 25 மில்லிமீற்றர் முதல் 35 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் மொன்றியல் நகரின் சில பகுதிகளில் மழைநீருடன் கலந்த பனிப்பொழிவு (Slush) அல்லது உறைபனி மழை (Freezing Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
