ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் ஏற்பாட்டில், திருகோணமலைப் பிரகடனத்தை வலிதாக்கும் முல்லைத்தீவு மாவட்ட மாநாடு இன்று (28) இலங்கை செஞ்சிலுவைச்சங்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கலாநிதி இ.ஸ்ரீ ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் உருவாக்கம், நோக்கம் மற்றும் தேவை தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
இக்கலந்துலையாடலில் செயற்பாட்டாளர்களான திரு.கமலேந்திரன் மற்றும் செல்வி. வனிதா சேனாதிராஜா ஆகியோரால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
குறித்த மாநாட்டில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு உள்ளக முறைகளை நிராகரித்தலும் வெளியக பொறிமுறைகளை உருவாக்குவதற்குமான மூலதத்துவங்கள் என உள்ளடங்களிய ‘திருகோணமலைப் பிரகடனம்’ மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரிடமும் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் செயற்பாட்டாளர்கள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் சார்பாக கலாநிதி இ.ஸ்ரீ ஞானேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் ‘திருகோணமலைப் பிரகடனம்’ குறித்த மாவட்ட ரீதியிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் வேளையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும்,
ஈழத்தமிழர் பெருமன்றின் உருவாக்கம் மற்றும் திருகோணமலை பிரகடனம் தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிகழ்ந்ததாகவும், பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு திருகோணமலை பிரகடனத்தை ஏற்று அதனை ஏற்றுக்கொண்டதாவும் , அவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றுடன் தொடர்ந்து செயற்படவும் விருப்பை வெளிப்படுத்தினர்.
மக்களின் நியாயமான உரிமைகள் எங்கு எங்கெல்லாம் கேள்விக்குட்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் பெருமன்றின் பிரசன்னத்தையும் ஆதரவையும் இணைந்து செயற்படுவதையும் இக் கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்ற கலந்துரையாடல்கள் ஏனைய மாவட்டங்களில் நடைபெறுவதை போன்று கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் நிறைவுசெய்தபின் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் திருகோணமலை பிரகடனம் அனைத்து முன்மொழிவுகளையும் உள்வாங்கி திருத்தங்கள் மற்றும் புத்தாக்கங்களுடன் இறுதிப்பிரகடனமாக ஏப்ரல் மாத நிறைவு நாட்களில் வெளியிடப்பட்டு உரியவகையில் உரிய தரப்பினர்களிடம் சமர்ப்பிக்கபட உள்ளதாகவும் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் அவர்களின் சுயநிர்னய உரிமையினை எந்தவித்திலும் எதன்பொருட்டும் சமரசம் செய்யாது செயற்பாடுகள் தொடர்ந்து நிகழும் என அவர் தெரிவித்தார்.
