கியூபெக்கின் முன்னணி கோப்பி நிறுவனமான கஃபே வில்லியம் (Café William) தனது உற்பத்தியை அமெரிக்காவிலிருந்து மீண்டும் கனடாவுக்கே மாற்ற முடிவு செய்துள்ளது.
இதற்காக ஷெர்புரூக் நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் புதிய பணியாளர்களைச் சேர்க்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா விதித்திருந்த சர்ச்சைக்குரிய பரஸ்பர வர்த்தக வரி (Reciprocal Tariffs) சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்தே,கஃபே வில்லியம்(Café William) நிறுவனம் இந்தத் தீர்மானத்தை
மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கனடா இடையே நிலவிய வர்த்தகப் போர் காரணமாக, உணவுப் பொருட்களுக்கு 25% முதல் 35% வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
இந்த அதிகப்படியான வரியைத் தவிர்க்க, கஃபே வில்லியம் நிறுவனம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அங்கேயே உற்பத்தியைத் தொடங்கியது. தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த வரிகளை ரத்து செய்துள்ளதால் நாங்கள் மீண்டும் தாயகம் திரும்பத் தயாராகிவிட்டோம் என நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி ரெமி ட்ரெம்ப்ளே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாயகம் திரும்பும் முடிவின் ஒரு பகுதியாக, கியூபெக்கின், ஷெர்புரூக் நகரில் உள்ள தொழிற்சாலையில் சுமார் 20 புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த ஓராண்டு காலமாக நிலவிய பொருளாதார நெருக்கடியின் போதும், எந்தவொரு ஊழியரையும் பணிநீக்கம் செய்யாமல், இந்த நிறுவனம் பாதுகாத்தது குறிப்பிடத்தக்கது. கஃபே வில்லியம்(Café William) நிறுவனத்தின் முடிவு கியூபெக் பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும், ஒட்டுமொத்த வர்த்தகச் சூழல் இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
