இந்த நாட்டில் புதிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்று புதிய கல்வி சீரமைப்பு ஊடாக புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். இந்த புதிய கல்வி சீரமைப்பு தொடர்பாக எதிர்ப்பினை தெரிவிக்கின்றவர்களுக்கு சரியான புரிதல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்
மட்டக்களப்பு உல்லாச விடுதி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை யுயசழ 360 நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தேவநாயகம் நிறோசன் தலைமையில் இன்று (01) இடம்பெற்ற Aaro 360 டிஜிட்டல் இலத்திரனியல் செயலியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அதனை உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல ஊழல் மோசடிகள் நிறைந்த ஒரு நாடாக காணப்பட்டது. இப்போது நாங்கள் இந்த ஊழல் மோசடிகள், இலஞ்ச ஊழல்களை வெகுவாக குறைத்து வருகிறோம். ஊழல் மோசடி குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டிருக்கிறது.
வெகு விரைவில் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையினை செய்து வருகிறோம்.
டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பம் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக இருக்கின்றது, எமது அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரம் எனும் ஒரு அமைச்சினை உருவாக்கி அதனூடாக பல நல்ல விடையங்களை முன்னெடுத்து வருகின்றது, அதில் விசேடமாக Gopay என்ற அப்பினையும் உருவாக்கியுள்ளோம்.
தற்போது வீட்டில் இருந்தவாறே அரச துறைக்கான கட்டணங்களைச் செலுத்தி தமக்கான சேவையினை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியை எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
அது மட்டு மல்லாது உங்கள் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழினை கூட வீட்டில் இருந்தவாறு பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியை நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம்.
அதனையும் தாண்டி தற்போது போக்குவரத்து பொலிசாரின் தண்டப்பணங்களை கட்டுவதற்காகவும் டிஜிட்டல் மயமாக்கல் உருவாக்கியுள்ளோம்.
எம்மை அண்மித்த இந்தியா போன்ற நாடுகளில் புதிய தொழில் நுட்பங்களின் ஊடாக தங்களது சேவைகளை விஸ்தீரணம் செய்திருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக அந்த நாடுகள் முன்னேற்றம் காண்பதற்கு அந்த தொழில்நுட்பமும் முக்கிய வகிபாகம் கொண்டுள்ளது.
