கியூபெக் லிபரல் கட்சியின் (PLQ) தலைவராகப் பொறுப்பேற்ற ஆறே மாதங்களில், பாப்லோ ரோட்ரிக்ஸ் (Pablo Rodriguez) தனது பதவியை இன்று முறைப்படி இராஜினாமா செய்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி முறைகேடு புகார்கள் கட்சிக்கு ஒரு தடைக்கல்லாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை மொன்றியாலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துகொண்ட ரோட்ரிக்ஸ், மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
தனது கட்சியை தாம் நேசிப்பதாகவும் கியூபெக் மாகாணத்திற்கும், நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைக்காகவே தாம் பதவி விலகுவதாகவும் அவர் கூறினார்.
கடந்த சில வாரங்கள் தனது குடும்பத்திற்கு மிகவும் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்ட ரோட்ரிக்ஸ், தாம் எப்போதும் நேர்மையாகவே நடந்துகொண்டதாகவும், எதற்கும் வருந்தவில்லை என்றும் கூறினார்.
தனது அறிக்கையை வாசித்த பிறகு, செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் பாப்லோ ரோட்ரிக்ஸ் அங்கிருந்து வெளியேறினார்.
கடந்த ஜூன் மாதம் நடந்த கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ரோட்ரிக்ஸ் மீது அடுத்தடுத்து பல புகார்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
