கியூபெக் மாகாணத்தில் தொழிற்சங்கங்களின் நிதி நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மாகாண அரசாங்கம் Bill-3 எனப்படும் புதிய சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜீன் பௌலெட் (Jean Boulet) அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்தச் சட்டம், தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தொழிற்சங்கத்துக்கு செலுத்துவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குகிறது.
இந்த முயற்சிக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் “ஆட்சித்துறை தலையீடு” என்றும் “தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்” என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
‘பில் 3’ மசோதா நடைமுறைக்கு வந்தால், தொழிற்சங்கங்களின் கட்டண முறை முற்றிலும் மாற்றப்படும் நிலை காணப்படுகின்றது.
தொழிற்சங்கக் கட்டணங்கள் இனி முக்கிய பங்களிப்புகள் மற்றும் விருப்பப் பங்களிப்புகள் (Optional Contributions) என இரண்டாகப் பிரிக்கப்படும்.
விருப்பப் பங்களிப்புகள் மூலம் நிதியளிக்கப்படும் நடவடிக்கைகள் எவை என்பது குறித்து, தொழிற்சங்க உறுப்பினர்களிடையே ஆண்டுக்கு ஒருமுறையாவது பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, புதிய சட்டமூலம் வலியுறுத்துகின்றது.
