கனடாவின் முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான சோபீஸ் இன்க் (Sobeys Inc.)-க்குச் சொந்தமான FreshCo அங்காடியின் சில ரொறன்ரோ கிளைகளில், காசாளர்கள் தங்கள் உடலில் கேமராக்களை (Body-Worn Cameras) அணியத் தொடங்கியுள்ளனர்.
பணியாளர்கள் மீதான உபத்திரவம், தாக்குதல் மற்றும் அங்காடி திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை எதிர்த்துப் போராடுவதே, இதன் நோக்கம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், தாக்குதல்கள் குறைந்திருப்பதைக் காட்டுவதாக நிறுவனம் கூறினாலும், இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் தனியுரிமை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரொறன்ரோவில் உள்ள ஷெர்பர்ன் மற்றும் இசபெல்லா தெருவில் உள்ள ஒரு FreshCo கிளையில் காசாளர்கள் கேமரா அணிந்திருப்பதை பொதுமக்கள் கண்டறிந்ததை அடுத்தே, சோபீஸ் நிறுவனம் இந்தப் பரிசோதனைத் திட்டத்தை பொதுவெளியில் உறுதிப்படுத்தியது.
ரொறன்ரோ மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்தின் Centre for Free Expression இயக்குநரான ஜேம்ஸ் டர்க் (James Turk), இந்தக் கேமராக்கள் ஊழியர்களை பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்கக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவின் தகவல் மற்றும் தனியுரிமை ஆணையர் அலுவலகம், இந்தக் கேமராக்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து “தேவைக்கு அதிகமான தகவல்களை” சேகரிக்கக்கூடும் என்று கவலை வெளியிட்டுள்ளது.
