வெலிகம பகுதியில் அண்மையில் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் கைப்பற்றப்பட்டவை, ‘மெபெட்ரோன்’ (Mephedrone) என்ற போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால், குறித்த போதைப்பொருள் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, இதனை உறுதி செய்ய முடிந்ததாக தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வகையான போதைப்பொருள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 22 ஆம் திகதி வெலிகம பகுதியில் விடுதியொன்றில் ரஷ்ய நாட்டவரின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவந்ததாக கூறப்படும் ரகசிய போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போதே, ஐஸ் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 10 கிலோகிராம் நிறையுடைய குறித்த போதைப்பொருளுடன் 18 வயதுடைய மோல்டா நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
